For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Chennai மக்களே உஷார்...பொது இடங்களில் குப்பை கொட்டினால் Spot Fine | தொடங்கியது சோதனை முயற்சி!

12:52 PM Oct 08, 2024 IST | Web Editor
 chennai மக்களே உஷார்   பொது இடங்களில் குப்பை கொட்டினால் spot fine   தொடங்கியது சோதனை முயற்சி
Advertisement

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை விதிகளை மீறி கொட்டுபவர்கள், எரிப்பவர்களுக்கான அபராத தொகை உயர்த்தப்பட்டது. இந்த அபராதத்தை ஸ்பாட் பைன் முறையில் வசூலிக்க சோதனை முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

Advertisement

வந்தாரை வரவேற்று வாழ வைக்கும் சென்னையில் உள்ளூர் மக்கள், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் என பல லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, மருத்துவம் என பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் பிரதானப் பகுதியாக சென்னை அமைந்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் பிரதான பிரச்னைகளில் முக்கியமானதாக கருதப்படுவது குப்பை மேலாண்மை. இந்தியா முழுவதும் பரவலாக இந்த பிரச்னை காணப்படுகிறது. ஏற்கனவே, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டட கழிவுகளை விதிமுறைகளை மீறி கொட்டுவோர் மற்றும் திடக்கழிவு மேலாண்மையை சரியாகப் பின்பற்றாதவர்கள் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகளின் அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்து வருகின்றனர்.

தொடர்ந்து, பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டடக் கழிவுகளை கொட்டுவதை தவிர்க்கவும், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கையை மேம்படுத்தவும் அபராதத் தொகை விதிக்கப்பட்டு வந்தது. கடந்த 5 ஆண்டுகளாகவே அபராதம் விதிக்கும் செயல்பாடு அமலில் இருந்து வந்தது.

அதனடிப்படையில், சென்னை வடக்கு, மத்தியம் மற்றும் தெற்கு வட்டாரங்களுக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் கண்காணிப்புக் குழுவின் வாயிலாக குப்பைகளை நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் கொட்டாமல் பொது இடங்களில் கொட்டியவர்கள் மீது ரூ.79 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த அக். 2-ம் தேதி அந்த அபராதத் தொகை தற்போது திருத்தி சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

  1. பொது மற்றும் தனியார் இடங்களில் தூக்கி வீசப்படும் குப்பை மற்றும் வாகனங்களில் இருந்து குப்பை கொட்டுதல் உள்ளிட்டவற்றுக்கு அபராதம் ரூ.500 இல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  2. தனிநபர் இல்லங்களில் தரம் பிரிக்காமல் வழங்கப்படும் கழிவுகளுக்கு ரூ.100 இல் இருந்து ரூ.1,000 ஆகவும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.5,000 ஆகவும் அபராதம் விதிக்கப்பட உள்ளது.
  3. அங்கீகரிக்கப்படாத பொது இடங்களில் கட்டுமான கழிவுகளை கொட்டுபவர்களுக்கும் கழிவுநீர் கால்வாய்கள், நீர்நிலைகளில் குப்பை கொட்டுவோருக்கும் தனியார் மற்றும் பொது இடங்களில் திடக்கழிவுகளை எரிப்போருக்கும் அபராத தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  4. மரக்கழிவுகளை கொட்டினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படவுள்ளது.
  5. இதுதவிர மீன் வளர்ப்பு, இறைச்சிச் கழிவுகளை தரம் பிரிக்காமல் கொடுப்பவர்களுக்கு ரூ.5,000, கடை வியாபாரிகள், விற்பனையாளர்கள் முறையாக குப்பைத் தொட்டி வைக்கவில்லை என்றால் ரூ.1,000, குப்பைகளை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்.
  6. பொது நிகழ்ச்சிகள் நடந்த இடங்களில் 12 மணி நேரத்துக்குள் தூய்மைப்படுத்தப்படாமல் இருந்தால் ரூ.5 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும்.

எனவே, பொதுமக்கள் சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தங்களது வீடுகள், கடைகளில் குப்பை சேகரிக்க வரும் தூய்மைப் பணியாளர்களிடம் குப்பையை முறையாக மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்க வேண்டும். கட்டுமான கழிவுகளை அதற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும். இல்லையெனில் மாநகராட்சி ஊழியர்களால் அபராதம் விதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அபராதத்தை ஸ்பாட் பைன் முறையில் வசூலிக்க சென்னை மாநகராட்சி சார்பில் சோதனை முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்றையும் பெருநகர சென்னை மாநகராட்சி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Tags :
Advertisement