மெரினா கடற்கரை செல்வோர் கவனத்திற்கு... போக்குவரத்தில் மாற்றம்!
மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி, அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படை தொடங்கப்பட்டு 92-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில், இன்று பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் 21 ஆண்டுகளுக்கு பிறகு போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதையொட்டி, அப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன் விவரங்கள் பின்வருமாறு;
மெரினா காமராஜர் சாலையில், காந்தி சிலை, போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அனுமதி சீட்டு இல்லாத வாகனங்களை நிறுத்துவதற்கு வாலாஜா சாலையைப் பயன்படுத்த வேண்டும்.
திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரி முனையை நோக்கிச் செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கு பதிலாக, அடையாறு சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, அண்ணா சாலையைப் பயன்படுத்த வேண்டும். இதேபோல பாரி முனையில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக அந்த வாகனங்கள், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, காந்தி மண்டபம் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
அண்ணா சாலையிலிருந்து வரும் பேருந்துகள் வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ரத்னா கஃபே சந்திப்பு, ஐஸ் ஹவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம். தெரு, மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். இதேபோல கிரீன்வேஸ் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி, ஆர்.ஏ.புரம் 2வது பிரதான சாலை, டிடிகே சாலை, ஆர்.கே. சாலை, அண்ணா சாலை வழியாக செல்லலாம்.
வணிக வாகனங்கள், காமராஜர் சாலை, அண்ணா சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே.சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் செல்ல காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.
வாகன நிறுத்துமிடங்கள் அனைத்தும் காலை 9.30 மணிக்கு முடப்பட்டன. விமான சாகச நிகழ்ச்சியைப் பார்வையிட வாகன ஓட்டிகள் அண்ணா சாலை, வாலாஜா சாலை, சுவாமி சிவானந்தா சாலையைப் பயன்படுத்தலாம். வாகன நெரிசலைத் தவிர்க்க மக்கள், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்லவும், அசாம்பவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும், அமைதியான முறையில் சாகச நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்கு வசதியாக, சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில்,6,500 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.