மீனவர்களுக்கு பறந்த எச்சரிக்கை.. வெளியான முக்கிய அறிவிப்பு!
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று (21-11-2025) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று (22-11-2025) காலை மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.
இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, அந்தமான் கடல் தென்கிழக்கு மற்றும் தமிழக கடல் பகுதியில் காற்றில் வேகம் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அப்பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் அதிகபட்சமாக 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், நாகை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் நவம்பர் 24ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. மேலும், கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 24ஆம் தேதிக்குள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.