Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"பொது சுகாதார கட்டமைப்பை பலவீனப்படுத்தும் முயற்சிகள் தடுக்கப்பட வேண்டும் " - நீட் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதத்திற்கு ராகுல் காந்தி பதில்!

02:49 PM Jul 14, 2024 IST | Web Editor
Advertisement

" பொது சுகாதார கட்டமைப்பை பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் தடுக்கப்பட வேண்டும் " என நீட் தேர்வு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கடிதத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

Advertisement

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நீட் முறைகேடுகளை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் கோரிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும் என்று கோரியும், இந்தியா கூட்டணியில் உள்ள மாநிலங்கள் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டைப் போன்று அந்தந்த மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவர்  ராகுல் காந்திக்கு கடந்த 28-6-2024 அன்று கடிதம் எழுதினார்.

அதில் மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முறையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வருவதை தாங்கள் அறிவீர்கள் என்றும், தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் தேர்வில் ஏற்பட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்த சமீபத்திய செய்திகள் நாட்டில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக கடினமாக உழைக்கும் மாணவர்களின் கனவுகளை சிதைத்துள்ளதாகவும், கிராமப்புற ஏழை எளிய இளைஞர்கள் மருத்துவம் பயிலவேண்டும் என்ற கனவையும் இந்தத் தேர்வுமுறை தடுக்கிறது என்றும் தனது கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.   நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை எதிர்கட்சித் தலைவரின் பார்வைக்காக இத்துடன் இணைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் , தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் தாங்கள் குரல் எழுப்பவேண்டும் என்றும், இந்தியா கூட்டணியில் உள்ள மாநிலங்கள் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாட்டைப் போன்று அந்தந்த மாநில சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் இந்த கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாவது..

“ஜூன் 28, 2024 தேதியிட்ட உங்கள் கடிதத்திற்கு நன்றி. நீட் தேர்வு நமது உயர்கல்வி அமைப்பில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது. தேசிய அளவிலான மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை விளிம்பு நிலை மாணவர்கள் மீது உண்டாக்கும் பாதிப்பு குறித்தும் இது கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பாக, ஜூன் 4, 2024 அன்று நீட்-இளநிலை முடிவுகள் குறித்த தேதிக்கு முன்னரே வெளியான பிறகு, மாணவர்களின் நீதிக்காகக் காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமையின் பெருந்தோல்வியால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களைக் கடந்த ஒரு மாதத்தில் சந்தித்தேன். 24 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டும்

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது நான் ஆற்றிய உரையும், நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவனத்தை ஈர்த்தது. தனியார் பயிற்சி நிறுவனங்களுக்குச் செல்ல முடியாததும் பிற வசதிவாய்ப்புகள் இல்லாததும் கிராமப்புறத்தில் உள்ள திறமையான மாணவர்கள் சமவாய்ப்புடன் போட்டி போட முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது நம்முடைய பொதுக் கல்வி நெறிமுறைகளுக்கு எதிரானது ஆகும்.

மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசதிவாய்ப்புள்ள சிலருக்கு மட்டும் வாய்ப்பு கிடைப்பதைத் தடுக்கும் கூட்டுக்கடமை நமக்கு உள்ளது. பொது மருத்துவக் கல்வி முறையைக் கட்டமைப்பதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக உள்ளது. இதன் விளைவாக வலுவான பொது சுகாதார அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதைப் பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் கட்டாயம் கண்டிக்கப்பட வேண்டும்.
தங்களின் கடிதத்துக்காக மீண்டும் ஒருமுறை நன்றி. விரைவில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என ராகுல் காந்தி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Tags :
CMO TamilNaduCongressLoP Rahul GandhiMK StalinNEETRahul gandhi
Advertisement
Next Article