"தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை கலைக்க முற்படுவது கண்டனத்திற்குரியது" - டிடிவி தினகரன்!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "பணிநிரந்தரம் கோரி பத்தாவது நாளாக நீடிக்கும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் - பேச்சுவார்த்தை எனும் பெயரில் மிரட்டி தூய்மைப் பணியாளர்களின் அறப்போராட்டத்தை கலைக்க முற்படுவது கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், தங்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் ரிப்பன் மாளிகை வாயில் முன்பாக தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம் பத்தாவது நாளாக நீடித்துக் கொண்டிருக்கிறது.
சென்னை மாநகராட்சியின் தூய்மையையும், மக்களின் சுகாதாரத்தையும் பேணிக்காக்கும் தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டிய திமுக அரசு, ஜனநாயக ரீதியில் நடைபெறும் அவர்களின் அறப்போராட்டத்தை பேச்சுவார்த்தை எனும் பெயரில் மிரட்டி கலைக்க முயற்சிப்பதாக தூய்மைப் பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கொரோனோ பெருந்தொற்று காலம் தொடங்கி மழை, புயல், வெள்ளம் என அத்துனை பேரிடர்கள் காலத்திலும், தங்களின் உயிரை பொருட்படுத்தாமல் மக்களை காக்கும் மகத்தான பணியில் முன்களப்பணியாளர்களாக தங்களை ஈடுபடுத்திக் கொண்ட தூய்மைப்பணியாளர்கள் மீதான திமுக அரசின் அடக்குமுறை கடும் கண்டனத்திற்குரியது.
வாழ்வாதாரத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களுடன் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், மறுபுறம் தனியார் நிறுவனத்திற்கு ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.