“இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பை பரப்பும் முயற்சி” - மதுரை ஆதீனம் மீது திருமாவளவன் குற்றச்சாட்டு!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “மதுரை ஆதீனம் அவரது உயிருக்கு இஸ்லாமியர்களால் ஆபத்து என கூறியது அதிர்ச்சியளிக்கிறது. இது குறித்து காவல் துறை சிசிடிவி வெளியிட்டதில் அந்த மாதிரியான நிகழ்வு ஒன்றுமில்லை. இதில் தன்னச்சியாக நடைபெற்ற விபத்து. அதிலிருந்து அவர் தப்பித்துள்ளார். உயர்ந்த பொறுப்பில் உள்ள மடாதிபதி சமூகப் பதற்றம் ஏற்படாத வகையில் அமைதியை நிலை நாட்டுவதில் கவனமாக இருக்க வேண்டும்.
ஆனால், அவர் கொலை செய்ய இஸ்லாமியர்கள் முயற்சித்தார்கள் என்றெல்லாம் சொல்லியது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பை பரப்புவதற்காக ஒரு முயற்சியை சிறுபான்மை சமூகத்தினரை இந்து சமூகத்தினருக்கு எதிராக தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இதை குற்றச் செயலாக மாற்றுவதற்கு அவர் முயற்சிக்கிறார். அவரது பேட்டியை சாதாரணமாக கடந்து விட போய்விட முடியாது இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று பேசினார்.
அண்மையில் மதுரை ஆதீனம் பயணித்த கார் உளுந்தூர்பேட்டை அருகே விபத்துக்குள்ளானது. இது குறித்து அவர், கொலை முயற்சி என பேசியிருந்தார். அதன் பின்பு காவல்துறை விசாரித்ததில், கொலை முயற்சி இல்லை என விளக்கம் கொடுத்தனர். தொடர்ந்து மதுரை ஆதீனம், விபத்து குறித்த காவல்துறை அறிக்கை முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.