28 லட்சம் தீப விளக்குகளை ஏற்றி கின்னஸ் சாதனை படைக்க முயற்சி! ஒளி வெள்ளத்தில் மிதக்க உள்ள அயோத்தியின் சரயு நதிக்கரை!
அயோத்தியின் சரயு நதிக்கரையில் 28 லட்சம் தீப விளக்குகளை ஏற்றி கின்னஸ் சாதனை புரிவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தீபாவளி நாடு முழுவதும் நாளை (31ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி உத்தரபிரதேசத்தில் அயோத்தில் சரயு நதிக்கரையில் லட்சக்கணக்கான தீப விளக்குகளை ஏற்றுவது வழக்கம். தீபாவளி பண்டிகையின் முந்தைய நாளன்று ராமாயணத்தின்படி கடவுள் ராமர் வனவாசம் முடிந்து நாடு திரும்பிய நிகழ்வு கொண்டாடும் விதமாக தீப உற்சவம் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.
வருடா வருடம் இந்த தீப உற்சவ நிகழ்ச்சி நடைபெறும் நிலையில், ஏற்கனவே லட்சக்கணக்கில் தீப விளக்குகள் ஏற்றி கின்னஸ் உலக சாதனையும் படைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு தீப உற்சவ நிகழ்ச்சியின்போது 22 லட்சம் தீப விளக்குகள் ஏற்றப்பட்டது. அது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.
இந்நிலையில், இந்த ஆண்டும் தீப உற்சவ நிகழ்ச்சியையொட்டி அயோத்தி சரயு நதிக்கரையில் தீப விளக்கு ஏற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 28 லட்சம் விளக்குகளை ஏற்றி புதிய கின்னஸ் உலக சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாளான இன்று (அக். 30) இரவு சரயு நதிக்கரையில் 28 லட்சம் தீப விளக்குகளை ஏற்ற பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டப்பின் சரயு நதிக்கரையில் நடைபெறும் முதல் தீப உற்சவம் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.