#Manipur அமைச்சர் காஷிம் வசும் வீடு மீது குண்டு வீசி தாக்குதல்!
உக்ருல் மாவட்டத்தில் உள்ள மணிப்பூர் அமைச்சர் காஷிம் வசும் வீட்டின் மீது கையெறி குண்டு வீசி அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர். இதையடுத்து மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வந்த நிலையில், அங்கு மீண்டும் வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. டிரோன்கள், சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால், ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், தற்போது உக்ருல் மாவட்டத்தில் உள்ள மணிப்பூர் அமைச்சர் காஷிம் வசும் வீட்டின் மீது கையெறி குண்டு வீசி அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயம் ஏற்படவில்லை என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வெடிகுண்டு வெடித்த சமயத்தில் அமைச்சர் உள்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் வெளியில் சென்றிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குண்டு வெடித்ததில் அமைச்சரின் வீட்டின் சுவர்கள் மற்றும் சில பகுதிகள் சேதமடைந்தன. தாக்குதலுக்குப் பிறகு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதிகள் இந்த தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதையும் படியுங்கள் :டும்…டும்…டும்…| நடிகர் சித்தார்த்தை கரம்பிடித்தார் நடிகை #AditiRao ஹைதரி!
விசாரணைக்காக சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக அதிகாரி கூறினார். இந்த தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. வசும் மாநிலத்தில் ஆளும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான நாகா மக்கள் முன்னணியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இதற்கிடையில், தாங்குல் நாகா பழங்குடியினரின் உச்ச அமைப்பான டாங்குல் நாகா லாங், இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், குற்றவாளிகளைக் கைது செய்யுமாறு காவல்துறையை வலியுறுத்தியுள்ளது.