‘இந்திரா பவன்’ - டெல்லியில் திறக்கப்பட்ட காங்கிரஸ் புதிய தலைமையகம்!
டெல்லி அக்பர் சாலையில் கடந்த 47 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையகம் செயல்பட்டு வரும் நிலையில், புதிய தலைமையகம் டெல்லி கோட்லா சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தலைமையகத்திற்கு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக ‘இந்திரா பவன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்திரா பவன் திறக்கப்படுவதற்கான நிகழ்ச்சி இன்று (ஜன.15) டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் பல மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றியும் இந்திரா பவன் திறக்கப்பட்டது.
இத்திறப்பு விழாவில் பேசிய ராகுல் காந்தி, “1947 இல் இந்தியா உண்மையான சுதந்திரம் பெறவில்லை. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டபோதுதான் நாடு உண்மையான சுதந்திரத்தை அடைந்தது என மோகன் பகவத் கூறியிருப்பது, நமது சுதந்திரப் போராட்ட வீரர்களையும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் அவமதிப்பதும், நமது அரசியலமைப்பின் மீதான தாக்குதல் போன்றது” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் கருத்துக்கு பதில் தெரிவித்துள்ளார்.