For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஏடன் வளைகுடாவில் 22 இந்தியர்களுடன் சென்ற கப்பலில் தாக்குதல் | மீட்பு பணியில் இறங்கிய இந்திய கடற்படை...!

07:24 AM Jan 28, 2024 IST | Web Editor
ஏடன் வளைகுடாவில் 22 இந்தியர்களுடன் சென்ற கப்பலில் தாக்குதல்   மீட்பு பணியில் இறங்கிய இந்திய கடற்படை
Advertisement

22 இந்தியர்களுடன் சென்ற பிரித்தானிய எண்ணெய் கப்பலான எம்வி மார்லின் லுவாண்டா,  ஹவுதிகளால் தாக்கப்பட்டது.

Advertisement

செங்கடல் பகுதியில் செல்லும் கப்பல்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் ஹூத்தி குழுவின் நடவடிக்கைகளுக்கு எதிராக சமீபத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இணைந்து வான்வழி தாக்குதலை நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்து கொண்டிருந்த மார்லின் லுவாண்டா கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது ஹூத்தி கிளர்ச்சிக்குழு.

தற்போது பிரான்ஸ் , இந்தியா மற்றும் அமெரிக்க கடற்படை கப்பல்கள் அந்த கப்பலுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. தற்போது ஹூத்திக்கள் தாக்குதல் நடத்தியுள்ள மார்லின் லுவாண்டா கப்பலை இயக்குவது ஓஷியோனிக்ஸ் சர்வீசஸ் லிமிடெட் (Oceonix Services Ltd) என்ற இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும்.

இந்த டேங்கர் கப்பலானது மார்ஷல் தீவுகளின் கொடியின் கீழ் , டிராஃபிகுரா (Trafigura) என்ற பன்னாட்டு வர்த்தக நிறுவனத்தின் சார்பில் இயக்கப்படுகிறது. சனிக்கிழமையன்று (27.1.2024) கிடைத்த புதிய தகவலின்படி, கப்பலின் அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், டேங்கரில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளது டிராஃபிகுரா நிறுவனம் . கப்பல் தற்போது பாதுகாப்பான துறைமுகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது செங்கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஹூத்திக்களால் வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதலாகும். இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், காசாவில் உள்ள பாலத்தீனர்களுக்கு ஆதரவாக இந்த பகுதியில் வரும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தி வருவதாக ஹூத்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதத்திலிருந்து, உலகின் முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்றான செங்கடல் வழியாகப் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மீது ஹூத்திக்கள் டஜன்கணக்கான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் செங்கடல் பகுதியில் வணிக கப்பல்களின் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, ஏடன் வளைகுடாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் உடனடி நடவடிக்கையில் இறங்கியது.

தாக்குதல் நடத்தப்பட்ட கப்பலில் இருந்து உதவிக்கான அழைப்பு வந்ததையடுத்து, இந்திய கடற்படையின் ஏவுகணை அழிப்பு கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் உதவிக்கு அனுப்பப்பட்டதாக இந்திய கடற்படை சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்தக் கப்பலில் 22 இந்தியர்களைத் தவிர, வங்கதேசத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவரும் இருக்கிறார்.

Advertisement