#Gaza குடியிருப்புப் பகுதிகளில் தாக்குதல் - இஸ்ரேலுக்கு ஐ.நா கண்டனம்!
காஸாவின் குடியிருப்புப் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஒரே நாளில் 87 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. பல நாடுகள் போரை கைடுவிடுமாறு வலியுறுத்தியும் போர் தொடர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காஸாவின் பெய்ட் லாஹியா நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த கொடூர தாக்குதலில் இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இடிபாடுகளுக்கு இடையே பலபேர் சிக்கியுள்ளதாகவும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய கிழக்குக்கான ஐ.நா. அமைதித் தூதர் தோர் வென்னஸ்லேண்ட் தெரிவித்ததாவது;
“பல வாரங்களாக தீவிரப்படுத்தப்பட்ட இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கையால், ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன் மட்டுமல்லாமல், வடக்குப் பகுதிகளில் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.
இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாஸ் போராளிகள் மீண்டும் ஒருங்கிணைவதைத் தடுக்க, அக்டோபர் தொடக்கத்தில் இருந்து வடக்கு காசாவில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.