"மாட்டிறைச்சியின் பெயரில் தாக்குதல்" - #RahulGandhi கண்டனம்
மாட்டிறைச்சியின் பெயரால் நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டத்தின் ஆட்சி நிறுவப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.
மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தை சேர்ந்த ஹாஜி அஷ்ரஃப் முனீர் என்ற முதியவர், தானேவில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக சக பயணிகளால் தாக்கப்பட்டுள்ளார். வீடியோவில் பத்துக்கும் மேற்பட்டோர் அவரை தாக்குகின்றனர். மேலும் பலர் தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதையடுத்து, விசாரணை தொடங்கப்பட்டதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோல கடந்த 27ஆம் தேதி கூட ஹரியானாவில் புலம்பெயர் தொழிலாளி சபீர் மாலிக் என்பவர், மாட்டிறைச்சி சாப்பிடதற்காக 7 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு, உயிரிழந்தார். இந்த கொலை சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள் : #AndhraPradesh -ல் கனமழை எதிரொலி : 2 விரைவு ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு!
இந்நிலையில், வெறுப்புணர்வை அரசியல் ஆயுதமாகக் கொண்டு ஆட்சியைப் பிடித்தவர்கள் நாடு முழுவதும் பயத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது :
"குற்றம் செய்பவர்களுக்கு பாஜக அரசிடம் இருந்து சுதந்திரம் கிடைத்துள்ளது, அதனால் தான் அவர்களுக்கு தைரியம் வந்துள்ளது. சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதை, அரசு வாய்மூடி வேடிக்கை பார்க்கிறது. மாட்டிறைச்சியின் பெயரால் நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டத்தின் ஆட்சி நிறுவப்பட வேண்டும்.
சமூக ஒற்றுமையோடு வாழும் இந்தியர்கள் மீதான தாக்குதல் என்பது இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதலாகும். பாஜக எவ்வளவு முயற்சி செய்தாலும், வெறுப்புக்கு எதிராக இந்தியாவை ஒன்றிணைக்கும் இந்த வரலாற்றுப் போரில் நாம் வெற்றி பெறுவோம்"
- இவ்வாறு அவர் தெரிவித்தார்.