மத்திய காசாவில் தாக்குதல் - 4 பணயக் கைதிகளை இஸ்ரேல் ராணுவம் கொன்றதாக ஹமாஸ் குற்றச்சாட்டு!
மத்திய காசாவில் தாக்குதல் நடத்தி 4 பணயக் கைதிகளை இஸ்ரேல் ராணுவம் கொன்றதாக ஹமாஸ் குற்றம்சாட்டியுளளது.
பாலஸ்தீன பகுதியான காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடா் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மே 26-ஆம் தேதி பாலஸ்தீனத்தின் எல்லை நகரமான ராஃபாவில் உள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 45 போ் கொல்லப்பட்டுள்ளனா்.
ரஃபாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு உலகம் முழுக்க இருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து ஹமாஸ் இயக்கத்துடன் பேச்சுவர்த்தை நடத்தி பிணைக் கைதிகளாகச் சிறைபிடிக்கப்பட்டுள்ள மக்களை விடுவிக்க,இஸ்ரேல் அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதை வலியுறுத்தி, சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடந்த ஜூன் 1ம் தேதி இரவில் டெல் அவிவ் நகரில் வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை பதவிநீக்கம் செய்யக்கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த நிலையில் மத்திய காசாவில் ஜூன் 8 அன்று இரண்டு கட்டிடங்களில் இஸ்ரேலிய இராணுவம் ஒரே நேரத்தில் தாக்குதல்களை நடத்தியது. இந்த கொடூர தாக்குதலில் 200 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஹமாஸ் அமைப்பு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் அல் கஸ்ஸாம் செய்தித் தொடர்பாளரான அபு உபைதா “ மத்திய காசாவில் நடத்திய இஸ்ரேலிய தாக்குதல்களில் இஸ்ரேலைச் சேர்ந்த சில பணயக் கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் இந்த கொடூர தாக்குதல் காஸாவில் எஞ்சியிருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளின் வாழ்க்கையில் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் ” என அபு உபைதா தெரிவித்துள்ளார்.