சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்தாலும் போர் தொடரும் - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் திட்டவட்டம்!
சர்வதேச அளவில் இருந்து போர் நிறுத்தத்துக்கான அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து சண்டையிடும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அக். 7-ம் தேதி இஸ்ரேல் மீது காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து ஒரு மாதத்துக்கும் மேலாக காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுவரை (நவ.7) 10,328 பேர் பலியானதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில், 4,237 பேர் குழந்தைகள்.
கடல், வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து தற்போது தரை வழியாக தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல் ராணுவம், காஸாவின் மருத்துவமனைகள், மசூதிகள், முகாம்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது.இதனால், காஸா மருத்துவமனைகள் அடிப்படை வசதிகளின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஹமாஸுக்கு எதிராக தங்கள் நாட்டு ராணுவம் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டு வரும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக, 2வது பாதுகாப்பு வழித்தடத்தை இஸ்ரேல் திறந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினரின் கோட்டையாகத் திகழும் காஸா சிட்டிக்குள் நுழைந்து அந்த நகரை நோக்கி இஸ்ரேல் ராணுவம் முன்னேறி வருகிறது.
காஸாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தாக்குதல் நடவடிக்கை மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் ரகசியமாக அமைத்துள்ள சுரங்க நிலைகள் இஸ்ரேல் ராணுவத்துக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் எனவும், அந்த நிலைகளைப் பயன்படுத்தி இஸ்ரேல் ராணுவத்துக்கு ஹமாஸ் அமைப்பு மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தும் எனவும் அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சர்வதேச அளவில் நிர்பந்தம் அதிகரித்து வரும் சூழலில், அங்கு நடைபெற்று வரும் போரை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார்.
இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக் கட்டுவதற்கான இந்தப் போர் இறுதி வரை தொடரும் என்றும் இதை நிறுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறினார்.