இந்தியாவில் ஏடிஎம் தட்டுப்பாடா? ரிசர்வ் வங்கி, அரசிடம் வங்கிகள் புகார் எனத் தகவல்!
ஏடிஎம் இயந்திரங்கள் வழங்குவதில் உள்ள பற்றாக்குறை குறித்து வங்கிகள் மத்திய அரசிடமும் ரிசர்வ் வங்கியிடமும் முறையிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசின் இ-சந்தை வாயிலாக கொள்முதல் செய்தவற்கான விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும் என வங்கிகள் அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக முன்னணி வங்கியாளர்கள் கடந்த மாதம் நடைபெற்ற அதிகாரிகளுடனான சந்திப்பில் இந்த பிரச்னையை எழுப்பியதாக கூறப்படுகிறது. வாய் மொழியாக விவாதிக்கப்பட்ட நிலையில், போதிய ஏடிஎம் இயந்திரங்கள் வழங்கும் திறன், அதன் விற்பனையாளர்களுக்கு இல்லை என தெரியவந்துள்ளது.
தொழிற்துறையினரின் கூற்றுப்படி, 2020-ஆம் ஆண்டு மேக் இன் இந்தியா திட்டத்தில் ஏடிஎம் இயந்திரங்களை தயாரிக்க முடிவு செய்தபின் தான் இந்த தட்டுப்பாடு வந்ததாக கூறப்படுகிறது. ஏடிஎம் இயந்திரங்களை உற்பத்தி செய்வதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த அதிக காலம் ஆனதே இந்த தாமதத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும் அனைத்து ஏடிஎம் உற்பத்தியாளர்களும் மேக் இன் இந்தியா திட்டத்தில் முறையாக பதிவு செய்யாது உள்ளனர். இது குறித்த தெளிவு கிடைத்தால் தான் ஒழுங்கு நடவடிக்கைகளில் சிக்காமல் இருக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
அனைத்து வழிகாட்டுதல்களையும் பூர்த்தி செய்யும் பட்சத்தில் தனியார் ஏடிஎம் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அனுமதி அளித்தால் தான் இந்த பிரச்னை சீராகும் எனக் கூறும் வங்கி தரப்பினர், ஏடிஎம் இயந்திரத்தின் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர வேண்டிய கட்டத்தில் தட்டுப்பாடு சூழல் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டியது எனக் கூறுகின்றனர்.