கொள்ளையடிப்பதற்காக வெடி வைத்து தகர்க்கப்படும் ஏடிஎம் இயந்திரங்கள்! எங்கு தெரியுமா?
கொள்ளையடிப்பதற்காக ஏடிஎம் இயந்திரங்கள் வெடி வைத்து தகர்க்கப்படும் சம்பவங்கள் ஜெர்மனியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பொதுவாக கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் உள்ள பணத்தை கொள்ளையடித்துச் செல்வர். இவ்வாறு நடைபெறும் பல கொள்ளை சம்பவங்களை நாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால் கொள்ளையடிப்பதற்காக ஏடிஎம் இயந்திரத்தை வெடி வைத்து தகர்த்தப்பட்ட சம்பவத்தை கேள்விபட்டிருக்க வாய்ப்பில்லை. இது போன்ற சம்பவம் மிகப்பெரிய பொருளாதார நாடாக திகழும் ஜெர்மனியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு ஏடிஎம் இயந்திரங்கள் தகர்க்கப்பட்டு அதில் உள்ள பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது.
அங்கு ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒரு ஏடிஎம் இயந்திரம் தகர்க்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. ஜெர்மனியில் சில கும்பல்கள் இதுபோன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இந்த கொள்ளை சம்பவங்கள் கடந்த 2005 ம் ஆண்டு முதல் அரங்கேறி வருகிறது. காவல்துறையினர் இந்த குற்றச்செயல்களை தொடர்ந்து கண்காணித்து வந்தாலும் அதனை தடுக்க முடியவில்லை. இந்த குற்றச்சம்பவம் ஜெர்மனி மட்டுமின்றி ஐரோப்பா முழுவதும் அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஜெர்மனியின் அண்டை நாடான நெதர்லாந்தில் இத்தகைய சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அதனை தடுக்கும் விதமாக கடந்த 2015ல் நெதர்லாந்தில் ஏடிஎம் இயந்திரங்களின் எண்ணிக்கையை 20,000-த்தில் இருந்து 5,000-ஆக குறைத்தது அந்நாட்டு அரசு. இதனையடுத்து கொள்ளை கும்பல்களின் பார்வை ஜெர்மனி பக்கம் திரும்பியது.
ஜெர்மனியில் 50,000-ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏடிஎம் இயந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளதால் அங்கு கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மேலும், ஏடிஎம் மையங்கள் தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் அமைந்துள்ளதால், பணத்தை கொள்ளையடித்துவிட்டு அதனை வாகனத்தில் எடுத்துச்செல்ல கொள்ளையர்களுக்கு வசதியாக அமைந்துள்ளது.