டெல்லியின் 3-வது பெண் முதலமைச்சராக பதவியேற்றார் #Athishi
டெல்லியின் மூன்றாவது பெண் முதலமைச்சராக அதிஷி பதவியேற்றார். அவருக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமின் பெற்ற டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முதலமைச்சர் அலுவலகம் செல்லக் கூடாது, கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது என உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. இதனையடுத்து முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். புதிய முதலமைச்சராக அதிஷி தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து டெல்லி துணை நிலை ஆளுநரிடம் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட ஒப்புதல் கடிதத்தை வழங்கி பதவியேற்க அழைக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் இன்று டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவின் இல்லத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
இதனையும் படியுங்கள் : #ThirupatiLaddu புனிதத்தை மீட்டுவிட்டோம் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!
இந்த விழாவில் அதிஷிக்கு துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா டெல்லி முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவர்களை தொடர்ந்து கோபால் ராய், கைலாஷ் கஹ்லோட், இம்ரான் ஹுசைன் , சவுரப் பரத்வாஜ் உள்ளிட்டவர்களும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
இதேபோல சுல்தான்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற முகேஷ் அஹ்லாவத் புதிய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்சித்தை தொடர்ந்து மூன்றாவது பெண் முதலமைச்சராக அதிஷி பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.