அத்திக்கடவு - அவிநாசி திட்டம் | காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் #MKStalin!
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக சென்னை தலைமை செயலகத்தில் இருந்து துவங்கி வைத்தார்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட கால கனவான அத்திக்கடவு - அவிநாசி திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அத்திக்கடவு - அவினாசி திட்டம் என்பது, பில்லூர் அருகில் உள்ள பவானி ஆற்றிலிருந்து வெளியேறும் 2 ஆயிரம் கன அடி வெள்ள உபரி நீரை, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள வறட்சியான பகுதிகளின் நீர்நிலைகளில் நிரப்பி பயன்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டு இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது. தற்போது ரூ.1,916 கோடி செலவில் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இத்திட்டத்தின் மூலம் 3 மாவட்டங்களில் உள்ள 1,045 ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் எனவும், சுமார் 50 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்வது, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது ஆகியவை இத்திட்டத்தின் பிரதான நோக்கமாக உள்ளது.
இந்த நிலையில், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.