For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும் - பிரதமர் மோடி

02:08 PM Jan 10, 2024 IST | Web Editor
இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும்   பிரதமர் மோடி
Advertisement

100 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் நேரத்தில்,  இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

Advertisement

குஜராத் தலைநகர் காந்தி நகரில் 10-வது சர்வதேச வர்த்தக உச்சி மாநாடு இன்று தொடங்கியது.  இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத்,  செக் குடியரசு பிரதமர் பீட்டர் பியாலா,  மொசாம்பிக் அதிபர் பிலிப், குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ் வரத்,  முதலவர் பூபேந்திர படேல் மற்றும் தொழில் அதிபர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

சமீபத்தில் தான் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்தன.  இப்போது, ​​அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியா தனது இலக்கை நோக்கிச் செயல்பட்டு வருகிறது.  100 ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடும் நேரத்தில்,  இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை நாங்கள் கொண்டுள்ளோம்.  எனவே, அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவின் அமிர்தக் காலம்.  இந்த அமிர்த காலத்தில் நடைபெறும் முதல் குஜராத் உலக உச்சி மாநாடு என்பதால் இது இன்னும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கும் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், இந்தியாவின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் முக்கியமான பங்காளிகள்.  இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் பங்கேற்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.  'வைப்ரன்ட் குஜராத்' உச்சிமாநாட்டில் அவர் தலைமை விருந்தினராக கலந்து கொள்வது இந்தியாவிற்கும் யு.ஏ.இ.,க்கும் இடையே இருக்கும் வலுவான உறவை குறிக்கிறது.

உலகம் இந்தியாவை ஸ்திரத்தன்மையின் முக்கிய தூணாகப் பார்க்கிறது.  நம்பக்கூடிய ஒரு நண்பர்,  மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியில் நம்பிக்கை கொண்ட ஒரு பங்குதாரர்,  உலகளாவிய நன்மையை நம்பும் ஒரு குரல்,  உலகப் பொருளாதார வளர்ச்சியின் இயந்திரம்,  தீர்வுகளைக் கண்டறிவதற்கான தொழில்நுட்ப மையம், திறமையான இளைஞர்களின் சக்தி மற்றும் ஜனநாயகத்தை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.

யு.ஏ.இ நிறுவனங்களால் இந்தியாவின் துறைமுக உள்கட்டமைப்பில் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள புதிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இன்று,  இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா 11வது இடத்தில் இருந்தது.  இன்று, அனைத்து முக்கிய ஏஜென்சிகளும் இந்தியா,  வரும் ஆண்டுகளில் உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் என்று மதிப்பிடுகின்றன.  அது நடக்கும் என உத்தரவாதம் அளிக்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement