For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ககன்யான் திட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் | யார் இந்த அஜித் கிருஷ்ணன்?

08:15 PM Feb 27, 2024 IST | Web Editor
ககன்யான் திட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர்   யார் இந்த அஜித் கிருஷ்ணன்
Advertisement

ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 4 பேரில் ஒருவர் தமிழர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் சார்பில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 1984ம் ஆண்டு இந்தியாவின் ராகேஷ் சர்மா, சோவியத் விண்வெளி திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு பறந்துச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை படைத்திருந்தார். அதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக இஸ்ரோ சார்பில் விண்வெளி ஆய்வுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தபோதும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

அந்த வகையில் கடந்த 2018ம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது இத்திட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். இதையடுத்து இந்திய விமான படையை சேர்ந்த 12 வீரர்கள் விண்வெளி செல்லும் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டு, தீவிர பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது. அதில் இறுதியாக 4 பேர் தேர்வு செய்யப்பட்டு ரஷ்யாவில் இறுதிக்கட்ட பயிற்சிகளுக்காக அனுப்பப்பட்டிருந்தனர். அவர்கள் யார் என்பது குறித்து ரகசியம் காக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்த 4 வீரர்களையும் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன் மற்றும் சுபாஷ் சுக்லா ஆகிய 4 பேர் இந்தியாவின் முதல் விண்வெளி பயணத்திற்கான வீரர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் விங் கமாண்டர்கள் அல்லது குரூப் கேப்டன்கள் பொறுப்பில் இருந்து வருபவர்கள் ஆவர். குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார்.

யார் இந்த அஜித் கிருஷ்ணன்?

  • குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார்.
  • அவர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) இருந்து தேர்ச்சி பெற்றவர் ஆவார்.
  • அவர் விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக செயல்பட்டதற்காக, அந்த ஆண்டிற்கான ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் மற்றும் மரியாதை வாள் ஆகியவற்றைப் பெற்ற சிறப்புக்குரியவர்.
  • அஜித் கிருஷ்ணன் 21 ஜூன் 2003 அன்று இந்திய விமானப்படையின் போர்-விமானப் பிரிவில் நியமிக்கப்பட்டார்.
  • இவர் பயிற்சி விமானிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும் உள்ளார்.
  • மிகவும் சவாலான பணியான, இந்திய விமானப்படையின் புதிய விமானங்களுக்கான டெஸ்ட் பைலட்டாகவும் உள்ளார்.
  • அவருக்கு 2,900 மணி நேரத்திற்கும் மேலாக விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளது.
  • அவர் Su-30 MKI, MiG-21, MiG-21, Mig-29, Jaguar, Dornier, An-32 உள்ளிட்ட பல்வேறு விமானங்களை ஓட்டிய அனுபவம் வாய்ந்தவர்.
  • வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப் பணியாளர்கள் சேவைக் கல்லூரியில் (DSSC) பயிற்சி பெற்றவர்.

ககன்யான் திட்டத்தின் மூலமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட உள்நாட்டு தொழில்நுட்பங்களை கொண்டு ராக்கெட் மற்றும் கேப்ஸியூல் ஆகியவை தயாரிக்கபப்டுகிறது. பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவிற்கு விண்வெளிக்கு பயணித்து, அங்கு 3 நாட்கள் ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் வீரர்கள் பத்திரமாக பூமிக்கு திரும்புவது திட்டத்தின் நோக்கமாகும்.

Tags :
Advertisement