ஓபிஎஸ் மீதான சொத்துகுவிப்பு வழக்கு - உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை!
ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கில், மறு விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2001 - 2006 காலக்கட்டத்தில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, ஓ.பன்னீர்செல்வம், அவரது தம்பி ஓ.ராஜா, மகன் ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோர் மீது 2006-ஆம் ஆண்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
ஆனால் அடுத்த அதிமுக ஆட்சி காலத்தில் 2012-ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம் மீதான வழக்கில் ஆதாரங்கள் கிடைக்கவில்லை என, லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட சிவகங்கை நீதிமன்றம், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதற்கு எதிராக தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை திரும்பப் பெற அனுமதித்த, சிவகங்கை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தார்.
எம்பி, எல்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றி உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கை விசாரித்து வருகிறார். இதனிடையே இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்தது. அது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய் மற்றும் எஸ்.வி.என். பாட்டில் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட பல வழக்குகளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறார். இது தொடர்பாக சிலர் உச்ச நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுள்ளனர். அந்த வகையில் தம் மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனைக்கேட்ட நீதிபதிகள் மறு விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த மனு தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.