ராகுல்காந்தியின் ‘இந்திய நீதிப் பயணம்‘ - அசாம் மாநிலத்தில் தடுத்து நிறுத்தம்!
அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தியின் ‘இந்திய நீதி பயணம்‘ தடுத்து நிறுத்தப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் போலீஸார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘இந்திய ஒற்றுமை பயணம்‘ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்ட நிலையில் ஜனவரி 2-வது கட்டமாக இந்திய நீதிப் பயணத்தை பாத யாத்திரையை தொடங்கினார். மணிப்பூரில் இருந்து மும்பை வரை நடைபயணம் மேற்கொள்கிறார். ‘இந்திய நீதி பயணம்‘என்ற பெயரில் நடைபெறும் இந்த யாத்திரை மணிப்பூரின் தவுபல் மாவட்டத்தில் இருந்து ஜன.14 தொடங்கியது.
இதையும் படியுங்கள் ; ரூ.1003 கோடி முதலீட்டில் புதிய நிறுவனம் – முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
இந்நிலையில், 15 மாநிலங்களில் 6,713 கி.மீ. தூரம் நடைபெறும் இந்த யாத்திரை 67 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ராகுல் காந்தியுடன் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
முன்னதாக இந்த யாத்திரையை மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் தொடங்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. ஆனால், அங்கு அனுமதி வழங்குவதில் மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. இதைத்தொடர்ந்து தவுபல் மாவட்டத்தில் இருந்து இந்த யாத்திரை தொடங்குகிறது. மேலும், அசாமில் 2 இடங்களில் இரவு ஓய்வெடுப்பதற்கும் மாநில அரசு அனுமதி மறுத்தது. இதனால் மாற்று இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இதனையடுத்து, ராகுல்காந்தியின் ‘இந்திய நீதி பயணம்‘ தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, ராகுல்காந்தியின் நடைப்பயணம் அசாம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நடைப்பயணத்தின் போது அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மாவை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால், பாஜக தொண்டர்கள் ராகுல் காந்தியின் நடைபயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, தடையை மீறி ராகுல் காந்தியை வரவேற்க கவுஹாத்தி எல்லையில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கூடியதால், காவல்துறையினர் குவிக்கப்பட்டு தடுப்புகள் ஏற்படுத்தி இருந்தனர். எல்லையை ராகுல் காந்தி அடைந்ததும், மேளதாளத்துடன் ராகுல் காந்தியை வரவேற்ற கட்சித் தொண்டர்கள் போலீஸார் அமைத்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு முன்னேற முயற்சி செய்தனர். இதனைத்தொடர்ந்து, காங்கிரஸ் தொண்டர்கள் மீது காவல்துறையினர் லேசான தடியடி நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.