#AsianChampionsTrophy | மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி – தாய்லாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இன்றைய ஆட்டத்தில் தாய்லாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் கடந்த 11ம் தேதி தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜப்பான், தென் கொரியா சீனா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இதையும் படியுங்கள் : வசூலில் மிரட்டும் #Amaran… 14 நாட்கள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?
இந்திய அணி தனது முதல் போட்டியில் மலேசியாவை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. தென் கொரியாவுடன் நடந்த இரண்டாவது போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி - தாய்லாந்து அணியுடம் மோதியது. இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 13-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக தீபிகா 5 கோல்களை அடித்து அசத்தினார். மேலும், பிரீத்தி தூபே, லால்ரெம் சியாமி, மனிஷா சவுகான் ஆகியோர் தலா 2 கோல்களும், பியூட்டி டங் டங், நவ்நீத் கவுர் தலா 1 கோலும் அடித்தனர். இந்திய அணி நாளை மறுநாள் (நவ.16) சீனாவுடன் மோத உள்ளது.