Asian Champions Trophy Hockey | சீனாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி!
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் இந்திய அணி சாம்பியன் ஆனது. சீனாவுக்கு எதிரான பைனலில் 1-0 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.
8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், சீனா, தென்கொரியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
முதல் அரையிறுதி போட்டி பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டி 1 -1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியை தீர்மானிக்க போட்டி பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு சென்றது. அதில் 2-0 என்ற கணக்கில் சீனா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பின்னர் நடந்த 2வது அரையிறுதி போட்டியில் தென்கொரிய அணியை இந்தியா எதிர்கொண்டது. இப்போட்டியில் 4 – 1 என்ற கோல்கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், இறுதி போட்டியில் சீனாவை இந்தியா எதிர்கொண்டது. துவக்கத்தில் இருந்து சீன வீரர்கள் சிறப்பான முறையில் தற்காப்பு ஆட்டம் ஆடினர். இந்திய அணியின் பல கோல் வாய்ப்புகளை தடுத்தனர். போட்டியின் 10 வது நிமிடத்தில் இந்தியாவுக்கு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் அடித்த பந்து கோல் போஸ்டுக்கு வலது புறமாக விலகிச் சென்றது.
போட்டியின் 25 வது நிமிடத்தில் இந்தியாவுக்கு 3வது 'பெனால்டி கார்னர்' வாய்ப்பையும் இந்திய வீரர்கள் வீணடித்தனர். முதல் பாதியில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் சீன வீரர்கள் ஆக்ரோஷம் காட்டினர். அடுத்தடுத்து இரு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு பெற்றனர். இருப்பினும் இந்திய அணி கோல் கீப்பர் கிருஷ்ணன் பதக் சிறப்பாக செயல்பட்டு, வாய்ப்பை தடுத்தார்.
போட்டியின் கடைசி 10 நிமிடத்தில் இந்திய வீரர்கள் தொடர்ந்து சீன ஏரியாவுக்குள் தாக்குதல் தொடுத்தனர். இம்முறை இதற்கு நல்ல பலன் கிடைத்தது. போட்டியின் 51வது நிமிடத்தில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கொடுத்த பந்தை பெற்ற ஜுக்ராஜ் சிங், அதே வேகத்தில் அருமையான கோல் அடித்தார். போட்டி முடிய 27 வினாடி மட்டும் இருந்த நிலையில் சீனா 'பெனால்டி கார்னர்' கேட்டு அப்பீல் செய்ய, நடுவர் ஏற்க மறுத்தார். முடிவில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. ஆசிய சாம்பியன்ஸ் தொடரில் ஐந்தாவது முறையாக கோப்பை வென்றது.
அரையிறுதியில் தோற்ற பாகிஸ்தான், தென் கொரியா அணிகள் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மோதின. இதில் பாகிஸ்தான் அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, மூன்றாவது இடம் பிடித்தது.