ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் 2024 - இந்திய அணி அறிவிப்பு!
ஆசிய அணிகளுக்கான பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய அணிகள் பங்கேற்கும் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஆசிய அணிகளுக்கான பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பி.வி.சிந்து, ஹெச்.எஸ். பிரணாய், லக்ஷயா சென், கே.ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த போட்டி மலேசியாவில் வரும் பிப்ரவரி மாதம் 13-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
சென்' சகோதரர்களான லக்ஷயா, சிராக்கும் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர். இவர்களுடன், நட்சத்திர இரட்டையர்களான சாத்விக் சாய்ராஜ்/சிராக் ஷெட்டியும் இணைந்துள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறும் வகையில் ரேங்கிங் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ள இந்தப் போட்டி முக்கியமானதாகும். இந்திய ஆண்கள் அணி இதுவரை 2 முறை வெண்கலப் பதக்கம் (2016, 2018) வென்றுள்ளது.
இதையும் படியுங்கள்: முதல் டி20 போட்டி – இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை..!
ஆண்கள் அணிக்கு ஆசிய விளையாட்டுகளில் வெண்கலம் வென்ற பிரனாய் தலைமை ஏற்கிறார். சீனியர் ஸ்ரீகாந்த், இளம் வீரர் லக்சயா சென் சேர்க்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் தேசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற சிராக் சென், பிருத்வி ராய், சூரஜ் புதுமுகங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 2023 ஆசிய விளையாட்டு, ஆண்கள் இரட்டையர்கள் பிரிவில் தங்கம் வென்ற சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடியும் களமிறங்குகிறது. துருவ் கபிலா, எம்.ஆர். அர்ஜுன் உள்ளிட்டோரும் உள்ளனர்.
பெண்கள் அணிக்கு ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற பி.வி. சிந்து தலைமை ஏற்றுள்ளார். கடந்த 4 மாதங்களாக முழங்கால் காயத்தால் போட்டிகளில் பங்கேற்காமல் உள்ள இவர், இந்த ஆண்டில் களமிறங்க இருக்கிறார். தேசிய சாம்பியன், 16 வயது வீராங்கனை அன்மோல் கார், ஜுனியர் சாம்பியன்ஷிப்பில் அசத்திய தன்வி சர்மா, ஆஷ்மிதா சாலிஹா உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். பெண்கள் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிராஸ்டோ, காயத்ரி கோபிசந்த், டிரீசா ஜாலி புதியதாக ஸ்ருதி மிஸ்ரா, பிரியா தேவி சேர்க்கப்பட்டனர்.