ஆசிய கோப்பை விவகாரம் - இந்தியாவிடம் கோப்பையை தர நக்வி நிபந்தனை..!
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
ஆனால் இந்திய அணியானது பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் சங்கத் தலைவருமான மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்துவிட்டனர். இதனால் இந்திய அணி கோப்பை இல்லாமலே வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே நேரத்தில் கோப்பை வாங்க மறுத்ததால் இன்னும் இந்திய அணிக்கு கோப்பை வழங்கப்படவில்லை. இதனை தொடர்ந்து நேற்று நடந்த ஆசிய கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பிசிசிஐ உறுப்பினர்கள் கோப்பையை இந்தியாவிற்கு அனுப்புமாறு வலியுறுத்தினர்.
இந்த நிலையில் இந்தியாவிற்கு கோப்பையை வழங்க மோசின் நக்வி நிபந்தனை ஒன்றை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக, கோப்பையை இந்தியாவிடம் தர தயாராகவே உள்ளேன். கோப்பையை பெற பிசிசிஐ ஆர்வமாக இருந்தால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்திற்கு வந்து என்னிடம் இருந்து கோப்பையை பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் இந்த சர்ச்சை தொடர்பாக தான் மன்னிப்பு கேட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரித்தார்.