"என் மூச்சு உள்ள வரை நானே பாமக தலைவர்... அன்புமணிக்கு வழங்கமாட்டேன்" - ராமதாஸ் திட்டவட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
"அன்புமணி செயல்பாடுகளை பார்க்கும் போது என்னுடைய மூச்சு காற்று இருக்கும் வரை அவருக்கு தலைவர் பதவியை வழங்க மாட்டேன். நான் ஒரு நல்ல தந்தையாக, வழிகாட்டியாக இருந்திருக்கிறேன். ஆனால், மாநாட்டின் போதும் அதற்கு பிறகும் நடைபெறுகின்ற செயல்களை பார்க்கும்போது மிக மிக வருத்தமாக இருக்கிறது. பாமக கட்சியை தொய்வில்லாமல் நடத்த ஆதரவு பெருகியுள்ளது. குடும்பத்தை சார்ந்தவர்கள் அரசியலுக்கு வர கூடாது என கட்சி ஆரம்பிக்கும் போது கூறினேன்.
ஆனால், அதனை காப்பாற்ற முடியவில்லை. 2026 தேர்தலுக்குப் பிறகு அன்புமணிக்குத் தலைவர் பதவியை தருகிறேன் என நேற்று சொன்னதற்கு 99% பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த 1% அன்புமணியின் குடும்பத்திற்காக விட்டுவிடுகிறேன். தந்தை தாயை மகிழ்ச்சியாக வைக்க வேண்டும். இதை அன்புமணியிடம் கூறினால் மகிழ்ச்சியாக வைத்திருக்கேன் என கூறுவார். மைக்கை தூக்கி அடிக்கிறார்.
பாட்டிலை எடுத்து தாயை அடிக்கிறார். தனி ஒரு மனிதனாக 96 ஆயிரம் கிராமங்களுக்கு இரவு பகலாக சென்று பாடுபட்டேன். அன்புமணிக்கு தலைவர் பதவி வழங்க மாட்டேன், செயல்தலைவராக செயல்பட வேண்டும். அய்யா உத்தரவு படி செயல்தலைவராக செயல்படுவேன் என அன்புமணி கூறினால் எனது மனதில் மகிழ்ச்சி ஏற்படுத்தும். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று கூறினால் அதெல்லாம் பொய் என் அன்புமணி கூறுவார்"
இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.