சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அரவிந்த் சிதம்பரம் - முதலமைச்சர் #MKStalin வாழ்த்து!
சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அரவிந்த் சிதம்பரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வளாகத்தில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியை ஃபிடே ஆதரவுடன் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தியது. இந்த செஸ் தொடர் நவ.5 முதல் தொடங்கி 11ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.70 லட்சம் என ஆகும்.
இந்த கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். டைபிரேக்கர் முறையில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் லெவோன் ஆரோனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் . டைபிரேக்கர் முறையில் நடைபெற்ற இந்த இறுதிச்சுற்றில் கடும் போட்டிக்கு இடையே 2-0 என்ற கணக்கில் லெவோன் ஆரோனை வீழ்த்தி அரவிந்த் சிதம்பரம் அசத்தினார்
இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் லெவோன் ஆரோனை வீழ்த்திய அரவிந்த் சிதம்பரத்துக்கு ரூ.15 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..
“ சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில், பட்டம் வென்ற அரவிந்த் சிதம்பரத்துக்கு வாழ்த்துகள். புத்திசாலித்தனமான யுக்தி குறிப்பாக இறுதிச் சுற்றில் அவரின் தீர்க்கமான ஆட்டம் குறிப்பிடத்தகுந்த வெற்றியைத் தந்துள்ளது. சேலஞ்சர்ஸ் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட பிரணவ்விற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உலக செஸ் அரங்கில் சென்னையின் தகுதியை மேலும் உயர்த்தும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு பாராட்டுகள் எனப் பதிவிட்டுள்ளார்.