பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளிய சுவாமி நடராஜர்.. - ஆறுமுகநேரியில் பக்தர்கள் திரளாக தரிசனம்!
ஆறுமுகநேரியில் உள்ள ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி திருக்கோயிலில் ஆனி உத்திர பெருந்திருவிழாவின் 8ஆம் நாள் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி திருக்கோயில் உள்ளது.
திருவாடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆனி உத்திரப் பெருந்திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் தொடர்ந்து 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் இந்த திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமியும், அம்பாளும் ஒவ்வொரு அலங்காரத்தில், வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
இந்நிலையில் எட்டாம் திருநாளான நேற்று சுவாமி நடராஜர், சிவகாமி அம்பாளுடன்
மகாவிஷ்ணு ரூபமாக, பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் பச்சை
சாத்தி கோலத்தில் எழுந்தருளி, கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பச்சை நிற மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து, சுவாமியை தரிசனம் செய்தனர்.