ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு - ஆருத்ரா பிக்சர்ஸ் என்ற பெயரில் சினிமாவில் முதலீடு செய்தது அம்பலம்!
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் புதிய திருப்பமாக, பொதுமக்களிடம் அபகரித்த பணத்தை கொண்டு ஆருத்ரா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை பதிவு செய்து சினிமாவில் முதலீடு செய்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
வேலூரை தலைமையிடமாக கொண்ட ஆருத்ரா நிதி நிறுவனம், சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கிளைகளை கொண்டிருந்தது. இந்நிறுவனம், அதிக வட்டி தருவதாக கூறி மக்களை ஏமாற்றியது. இந்த நிறுவனத்தின் கவர்ச்சிகரமான அறிவிப்பால் மயங்கிய அப்பாவி மக்கள், ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
ஆனால் ஆருத்ரா நிறுவனம் வட்டியும் வழங்காமல், அசலும் வழங்காமல் மோசடி செய்தது அம்பலமானது. இந்த நிதி நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகினர். இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இந்த மோசடியில் தொடர்புடைய ஆரூத்ரா நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து துபாயில் பதுங்கி இருக்கும் அவரை பிடிக்க போலீஸ் வியூகம் வகுத்திருந்தது. கடந்த 3 வருடமாக தேடப்பட்டு வந்த நிலையில் முக்கிய குற்றவாளியான ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டார். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரை சென்னை கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அந்த வகையில் மத்திய அரசு மூலமாக துபாய் அரசிற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மோசடி செய்த பணம் வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் அமலாக்கத்துறை ஏற்கனவே இந்த மோசடி வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும் அமலாக்கத்துறை சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளது. மேலும் குற்றப்பிரிவு போலீசாருக்கு முன்பு ராஜசேகரை காவலில் எடுக்க அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, ஆருத்ரா பிக்சர்ஸ் என்ற பெயரில் நிறுவனத்தை உருவாக்கி அதில் பணத்தை முதலீடு செய்திருப்பதை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் சினிமாவில் எந்தெந்த படங்களுக்கு பைனான்ஸ் செய்யப்பட்டுள்ளது, ஆருத்ரா பிக்சர்ஸ் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட பட தயாரிப்புகள் என்னென்ன? மோசடி பணத்தில் சினிமா துறை நபர்கள் யார் யாருக்கெல்லாம் பணம் கைமாற்றப்பட்டது என்பது குறித்தும் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.