கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டார் மத்திய அமைச்சர் #RajnathSingh
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
திமுக சாா்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா, பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டையொட்டி மத்திய அரசு சாா்பில் அவரின் உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை இன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டது.
இதன் ஒருபகுதியாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிற்பகல் சென்னை வந்தடைந்தார். இதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களுக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , தமிழ்நாடு அமைச்சர்கள், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இதன் பின்னர் கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழா சென்னை கலைவாணா் அரங்கில் இன்று மாலை மணியளவில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார். இந்த விழாவில், தமிழக அமைச்சா்கள், பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்றனர்.