"அரசு மருத்துவமனையில் முதன்முறையாக செயற்கை கருத்தரித்தல் மையம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்!
செயற்கை கருத்தரித்தல் மையம் என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மகளிர் நோயியல் நிலையம் மற்றும் எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் அதிநவீன செயற்கை கருத்தரிப்பு மையம் மற்றும் பிரசவ வளாக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி, அரசு சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணி ராஜன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் செயற்கை கருத்தரிப்பு மையத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இதனையடுத்து நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர் கூறியதாவது, "செயற்கை கருத்தரித்தல் மையம் என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லி, சண்டிகர், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் இருந்தாலும் அவர்கள் தனியார் மருத்துவமனையில் பணம் வசூலிப்பது போல் இரண்டரை லட்சம் ரூபாய் வரை பெறுகிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள செயற்கை கருத்தரிப்பு மையம், முழுவதும் இலவசமாக செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு சில கருத்தரிப்பு மையங்களில் மனிதநேயமற்ற செயலை செய்தனர். ஈரோடு, சேலம் போன்ற 5 இடங்களில் இருந்த தனியார் கருத்தரிப்பு மையத்தில் நடந்த முறைகேடு கண்டுபிக்கப்பட்டு, அவை சீல் வைக்கப்பட்டன.
இது போன்ற அவலங்கள் இனி நடக்க கூடாது என்பதற்காக தான் அரசு சார்பில் எழும்பூர் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையத்தை தொடங்கி வைத்துள்ளோம். 8 படுக்கைகள் கொண்ட அதிநவீன பிரசவ அறை திறந்து வைக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் கூட இல்லாத அளவுக்கு தரமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, உடல் பருமனாக இருப்பது, உணவு பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்டவை கருவுறாமல் இருப்பதற்கான காரணங்கள். 3.9 % கருத்தரிப்பு பிரச்னை 30 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை கருத்தரிப்புக்கு 7 முதல் 10 லட்சம் செலவாகும் நிலையில் இங்கு முழுவதும் இலவசமாக செய்யப்படுகிறது.
மதுரையில் 2வது கருத்தரிப்பு மையம் தொடங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுவாக நீட் தேர்வு என்பது குழப்பமான ஒன்று. தேவையற்ற ஒன்று. நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. கடந்த ஆண்டுகளில் ஒருவர் முதல் மூவர் வரையில் தான் 720 க்கு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இது சந்தேகம் எழுப்புகிறது.
ஹரியானாவில் 7 பேர் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர். ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண், ஒரு வினா தவறு என்றால் 4 மதிப்பெண் உடன் ஒரு அபராத மதிப்பெண் விதிக்கப்படும். தற்போது 718, 719 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அது எப்படி வந்தது என்று வினா எழுகிறது. கருணை மதிப்பெண்கள் எப்போது இருந்து தொடங்கப்பட்டது. இது யாருக்கு வழங்கப்படும் என்று கேட்கப்பட்டது.
அது உச்ச நீதிமன்ற ஆணை என்கிறார்கள். எப்போது எந்த வழக்குக்கு வந்த தீர்ப்பு என்று குறிப்பிடவில்லை. தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் கருணை மதிப்பெண்கள் பற்றி தெரியுமா? யாருக்கு எதற்காக நேர பற்றாக்குறை ஏற்பட்டது, எவ்வளவு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது, எத்தனை பேருக்கு வழங்கப்பட்டது என்று சொல்ல வேண்டும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.