ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த நபர் கைது!
தென்காசியில் இரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் டவுண் பகுதியைச் சேர்ந்த பிச்சைக்கண்ணு (42). இவர் இன்னிசை குழுவில் பாடகராக உள்ளார். பல்வேறு பகுதிகளுக்கு பாட்டு பாட சென்ற போது அப்பகுதியில் உள்ளவர்களிடம் நெருங்கி பழகியுள்ளார். அப்போது, தான் ரயில்வேயில் வேலை பார்த்து வருவதாகவும், பல்வேறு அதிகாரிகளை தனக்கு தெரியும் எனவும், பணம் கொடுத்தால் எளிதாக தன்னால் வேலை வாங்கி தர முடியும் என்று கூறியுள்ளார்.
இதை நம்பிய தென்காசி மாவட்டம் அச்சன்புதூர்ரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் ரூபாய் 6.80 லட்சமும், சுரண்டையைச் சேர்ந்த திருமலை குமார் என்பவர் 5.42 லட்சமும் கொடுத்துள்ளனர். ஆனால் பல மாதங்கள் ஆகியும் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. இதனால் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த முத்துராமலிங்கம் மற்றும் திருமலை குமார், தென்காசி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில், மதுரையில் பதுங்கி இருந்த பிச்சைக்கண்ணு என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.