“கோடையில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு” - அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!
சென்னை அண்ணாசாலையிலுள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் எதிர்வரும் கோடை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்குதல் தொடர்பாக அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “கோடைக்காலத்தை எதிர்கொள்ள ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 22,000 மெகா வாட் மின்சாரம் இந்த ஆண்டு தேவைப்படும். தமிழ் நாடு முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
250 துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை நாங்களே உருவாக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறோம். காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மூன்றில் ஒரு பங்கு காலி பணியிடங்கள் உள்ளது. 50 சதவீதம் மின்சாரம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
கோடை காலத்தில் 22ஆயிரம் மெகாவாட் தேவை உள்ளது. அதற்கு தயார் ஆகி வருகிறோம். 6000 மெகாவாட் டெண்டர் கோரி இருக்கிறோம். ஏப்ரல் மே மாதங்களுக்கு தேவை என்பதால் தான் 6ஆயிரம் மெகாவாட் டெண்டர் கோரப்பட்டுள்ளது. முன்பு இருந்ததை விட தேவை அதிகரித்துள்ளது. புகார்கள் இருப்பின் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது”
இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.