#TheGoatLife படத்திற்காக #ARRahmanக்கு கேரள விருதுகள் கிடைத்திருக்க வேண்டும் - இயக்குநர் பிளெஸ்ஸி!
ஆடுஜீவிதம் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கேரள விருதுகள் கிடைத்திருக்க வேண்டும் என இயக்குநர் பிளெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் நடிகர் ப்ரித்விராஜ், அமலாபால் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆடுஜீவிதம். இத்திரைப்படம் மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவலை (தி கோட் லைஃப்) தழுவி எடுக்கப்பட்டதாகும். மலையாளத்திலிருந்து தமிழிலும் ஆடு ஜீவிதம் நாவல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் இதனை எழுத்தாளர் விலாசினி மொழிபெயர்த்துள்ளார்.
பிளஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியிருந்தார். கே.எஸ். சுனில் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் சுமார் 10 ஆண்டுகளின் பணிகளுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், நடிகர் பிருத்விராஜின் நடிப்பும், படத்தின் உருவாக்கமும் பாராட்டுக்களைப் பெற்றன. உலகளவில் முதல் நாளில் ரூ.16 கோடி வசூலித்த இப்படம், ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூலை கடந்து சாதனைப் படைத்தது.
இந்த நிலையில் நேற்று கேரள அரசின் மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்த பட்டியலில் சிறந்த நடிகர் , சிறந்த இயக்குநர் போன்ற பிரிவுகளில் , சிறந்த ஒலி வடிவமைப்பு உள்ளிட்ட 9 பிரிவுகளில் விருதுகளை வாங்கி குவித்தது.
இந்த விருதுகள் குறித்து இயக்குநர் பிளெஸ்ஸி, தெரிவித்துள்ளதாவது..
"ரஹ்மானின் இசைதான் படத்துக்கு இதயம் போன்றது. படத்தின் கதை முழுவதையும் உணர்த்தும் விதமாகவும் மனதை தைக்கும் விதமாகவும் இசை அமைத்துள்ளார். இந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது கிடைக்காதது குறித்து நிச்சயமாக அவர் கவலைப்படப் போவதில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை ஆடுஜீவிதம் படத்தின் ஆன்மா ஏ.ஆர். ரஹ்மானின் இசைதான்" எனப் இயக்குநர் பிளெஸ்ஸி தெரிவித்துள்ளார்.