சிக்கிமில் ராணுவ வாகன விபத்தில் உயிரிழந்த கான்சாபுரம் #Soldier - உடலை விரைந்து கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை!
சிக்கிம் மாநிலத்தில் வாகனம் விபத்தில் உயிரிழந்த தமிழ்நாடு வீரர், வத்திராயிருப்பு அருகே உள்ள கான்சாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
சிக்கிம் மாநிலம் பாக்யோங்கில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், ஹரியானா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சுபேதார் கே.தங்கபாண்டியனும் உயிரிழந்தார்.
தங்கப்பாண்டியன்(41) வத்திராயிருப்பு அருகே உள்ள கான்சாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். உயிரிழந்த ராணுவ வீரர் தங்கப்பாண்டியன் தற்பொழுது சுபேதாரராக பணியாற்றி வந்துள்ளார். உயிரிழந்த தங்கபாண்டியனுக்கு வளர்மதி என்ற மனைவியும், 6 மற்றும் 8 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த 2004 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து, 20 ஆண்டுகளாக தங்கபாண்டியன் ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த தங்கபாண்டியன் உடலை உடனே அவரது சொந்த ஊரான கான்சாபுரம் கிராமத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணுவ வீரர் தங்கபாண்டியன் இறப்பு செய்தி அறிந்து குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.