மியான்மரில் பள்ளி மீது குண்டுவீசிய ராணுவம் - 22 பேர் உயிரிழப்பு!
மியான்மர் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ஆங் சான் சூகியின் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனை அடுத்து ராணுவ ஆட்சிக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக பல கிளர்ச்சி அமைப்புகள் ராணுவ ஆட்சிக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றன. இதில் 6,600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் மத்திய மியான்மரின் சகாயிங் பகுதியில் உள்ள ஓஹே தெய்ன் ட்வின் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியின் மீது நேற்று காலை மியான்மர் ராணுவம் குண்டுவீசி வான்வழி தாக்குதல் நடத்தியது. அப்போது இந்த தாக்குதலில் 20 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் அருகிலுள்ள 3 வீடுகள் சேதமடைந்தன.
இந்த தாக்குதலுக்கு எதிர்க்கட்சியான தேசிய ஒற்றுமை அரசாங்கம் (NUG) கண்டித்தது. இதனிடையே மியான்மர் ராணுவம் அரசு ஊடகங்கள் மீதான தாக்குதலை மறுத்துள்ளதுடன், எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைப் பரப்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், நேரில் கண்ட சாட்சிகளும் சுயாதீன ஊடக அறிக்கைகளும் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளன.