#ArmstrongMurder வழக்கு - 10பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 10 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் அவரின் இல்லத்தில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 27 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தனித்தனியாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பல்வேறு கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களும் இதில் தொடர்புடையவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம் குறித்து ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கடந்த வியாழக் கிழமை தெரிவித்தார். இந்த வழக்கில் 90 சதவீத விசாரணை முடிவடைந்துவிட்டதாகவும், கொலைக்கான காரணத்தை விரைவில் தெரிவிப்போம் எனவும் குறிப்பிட்டார். ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதானவர்களின் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முக்கிய நபர்கள் குறித்து காவல் துறை விரைவில் தெரிவிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 10 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கொலை குற்றத்தில் மூளையாக செயல்பட்ட வழக்கறிஞர் அருள், பொன்னை பாலு , ராமு திருமலை, மணிவண்ணன், சந்தோஷ், செல்வராஜ் உள்ளிட்ட 10பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்துள்ளது.