"ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார்" - கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் பேட்டி
"ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார்" என வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், அவர் வீட்டருகே மர்ம கும்பலால் அரிவாளால் வெட்டி தாக்கி கொலை செய்யப்பட்டார். இதனால், சம்பவ இடத்திலேயே ஆம்ஸ்ட்ராங் நிலை குலைந்து கீழே விழுந்துள்ளார். பின்னர், அந்த கும்பலானது நிகழ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்துள்ளார்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு சுரேஷ்
என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆம்ஸ்ட்ராங் பின்னிருந்து செயல்பட்டார் என்றும் எனவே அவரது சகோதரர் கூலிப்படையை ஏவி இவரை கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், சம்பவத்தில் தொடர்புடைய ஆற்காட்டு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 8 பேர், சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்ததாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேலும் 3பேரை காவல்துறையினர் கைது செய்தனர். படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல் இன்று இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க், வடக்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார், ஆகியோர் அயனாவரம் காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து பேசிய அஸ்ரா கார்க்..
” ஆம்ஸ்டர்டாங் கொலை வழக்கில் 10 தனிப்படை அமைக்கப்பட்டது. 4 மணிநேரத்தில் 8 சந்தேகப்படும் நபர்களை கைது செய்துள்ளோம். 3 இருசக்கர வாகனங்கள் 7 அரிவாள்களை பறிமுதல் செய்துள்ளோம். மேலும் 3 நபர்களை நேற்று மாலை கைது செய்துள்ளோம். 10 தனிப்படைகள் தீவிரமாக தேடியதால் அவர்களாகவே சரண் அடைந்துள்ளனர். ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் தான் இந்த கொலை நடந்துள்ளது. அரசியல் அடிப்படையில் கொலை நடந்துள்ளதாக எந்த ஒரு ஆதாரங்கள் இல்லை.” என அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.