ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம் அதிரடி..!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 ஜூலை மாதம் 5ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், இந்த வழக்கை காவல் துறையினர் நியாயமாக விசாரிக்கவில்லை என கூறி, விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் இது குறித்த ஆம்ஸ்ட்ரோங்கின் சகோதரர் இம்மானுவேல் பதிலளிக்க நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டனர். அதே வேளையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற ஆணை தொடரும் என்றும் உத்தரவில் தெரிவித்தனர்.