ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - நேபாளத்திற்கு தப்பிச் சென்ற முக்கிய குற்றவாளி சம்போ செந்தில்?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வரும் சம்போ செந்தில் நேபாளத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்க், சென்னை பெரம்பூரில், ஜூலை 5ம் தேதி ரவுடி கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த வழக்கில், 11 பேரை செம்பியம் போலீசார் கைது செய்தனர். அவர்களில், சென்னை குன்றத்துாரைச் சேர்ந்த ரவுடி, திருவேங்கடம் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். இவர் தவிர மற்ற 10 பேரும் காவல் விசாரணை முடிந்து பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த கொலையில் பாஜக நிர்வாகிகள் செல்வராஜ் மற்றும் அஞ்சலை ஆகியோர் முக்கிய சூத்திரதாரிகளாக பங்காற்றியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இதில் வட சென்னை பாஜக மகளிரணி துணை செயலாளரான அஞ்சலை தலைமறைவாகவுள்ள நிலையில், அவரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் பாஜக நிர்வாகி செல்வராஜையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த கொலை வழக்கில் திமுக நிர்வாகி மகன் சதீஷ், அதிமுகவைச் சேர்ந்த மலர்க்கொடி, தமாகாவைச் சேர்ந்த ஹரிஹரன் ஆகிய மூன்று வழக்கறிஞர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பல ரவுடிகள் இந்த கொலையின் பின்னணியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன் கொடுத்த தகவலின் பேரில் பிரபல ரவுடி சம்போ செந்திலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.