ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் மற்றும் திருமலை ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட ரௌடி ஆற்காடு சுரேஷின் தம்பி ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு, அவர் கூட்டாளிகளான சந்தோஷ், திருமலை, மணிவண்ணன், குன்றத்தூர் திருவேங்கடம், திருநின்றவூர் ராமு என்ற வினோத், அதே பகுதியைச் சேர்ந்த அருள், செல்வராஜ் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 11 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஜூலை 19ஆம் தேதி வரை சிறையிலடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் தப்பி ஓட முயன்ற போது போலீசார் சுட்டதில் உயிரிழந்தார். இந்நிலையில் மீதமுள்ள 10 பேரும் போலீஸ் காவல் முடிந்து பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள் : எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் சென்னை காவல் ஆய்வாளர் கைது! மோசடியில் உடந்தை என குற்றச்சாட்டு!
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் மற்றும் திருமலை ஆகிய 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்கு கூடுதலாக 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளனர்.