ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - நாகேந்திரன் உடல்நிலையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவு!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகேந்திரன், அவரின் மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு, உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அருள், மணிவண்ணன் உள்ளிட்ட 6 பேர் மட்டும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். மற்றவர்கள் சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது நீதிபதி, நாகேந்திரனின் உடல் நிலை குறித்து தினந்தோறும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் வேலூர் சிறைத்துறை ஏன் அறிக்கை தாக்கல் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்றால், சிறைத்துறைக்கு அபராதம் விதிக்க நேரிடும் என நீதிபதி எச்சரித்தார்.
முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி நாகேந்திரன் உடல் நிலை குறித்து ஆய்வு செய்து அனுப்பப்பட்ட அறிக்கையில், நாகேந்திரன் மருத்துவ சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாகேந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி, நாகேந்திரனுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, கல்லீரல் சிறப்பு மருத்துவர் அடங்கிய மருத்துவ குழுவை அமைத்து நாகேந்திரனை, பிப்ரவரி 26ம் தேதி பரிசோதித்து அறிக்கை அளிக்கும் படி சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு உத்தரவிட்டார்.
சென்னை மருத்துவக் கல்லூரி குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் எந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனக்கூறி, விசாரணையை மார்ச் 7ம் தேதி தள்ளி வைத்தார்.