ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு - அடுத்த விசாரணைக்குள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கறிஞர்களை நியமிக்க உத்தரவு!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரவுடி நாகேந்திரன், அவரின் மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நாகேந்திரன், அவரின் மகன் அஸ்வத்தாமன் ஆகியோர் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலமாக ஆஜராகி இருந்தனர். 8 பேர் நேரில் ஆஜராகி இருந்தனர்.
நாகேந்திரன் தரப்பு வக்கீல் பேசுகையில், குற்றம் சாட்டப்பட்ட நாகேந்திரன் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், சிறையில் அவருக்கு பரிந்துரைக்கப்பட்ட உணவு வழங்கப்படவில்லை எனவும் வாதிட்டார். அப்போது அரசு தரப்பில் மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி, நாகேந்திரன் சிறை மாற்றம் தொடர்பான மனுவுக்கு பதில் மனு வழங்குவதாக தெரிவித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர்கள் வழக்கறிஞர் வைக்காமல் வழக்கை இழுத்தடிக்க வேண்டாம் என்றும், அடுத்த விசாரணைக்குள் வழக்கறிஞரை நியமிக்காவிட்டால் இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாக வழக்கறிஞர் நியமிக்கப்படும் என்றும் திட்டவட்டமாக கூறி வழக்கின் விசாரணையை வருகிற பிப்ரவரி 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.