பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம்! கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்கில் ரூ.50 லட்சம் டெபாசிட்?
பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு ரூ.50 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்க், 52, சென்னை பெரம்பூரில், இம்மாதம், 5ம் தேதி ரவுடி கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த வழக்கில், 11 பேரை செம்பியம் போலீசார் கைது செய்தனர். அவர்களில், சென்னை குன்றத்துாரைச் சேர்ந்த ரவுடி, திருவேங்கடம், 33, என்கவுன்டரில் கொல்லப்பட்டார். இவர் தவிர மற்ற 10 பேரும் காவல் விசாரணை முடிந்து நேற்று, பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு ரூ.50 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த தொகை பெண் ஒருவரது வங்கி கணக்கில் இருந்து டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக, போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரியவருகிறது.
இதுதவிர, ஆம்ஸ்ட்ராங் வழக்கில், ஜாம்பஜாரை சேர்ந்த பிரபல தாதாவின் மனைவியான பெண் வக்கீலிடமும் போலீசார் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.