ரேட்டிங்கில் 2,800 புள்ளிகள்… வரலாற்று சாதனை படைத்த #ArjunErigaisi… என்ன தெரியுமா?
இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி ஃபிடே லைவ் ரேட்டிங்கில் 2,800 புள்ளிகளைக் கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற டபிள்யூஆர் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி - பிரென்சு வீரர் எம்விஎல் உடன் மோதினார். இரண்டு கிளாசிக்கல் ஆட்டங்களிலும் டிரா ஆனதால் ஆட்டம் ஆர்மகெடானை நோக்கி சென்றது. அதில் மூன்றிலும் வென்று அர்ஜுன் எரிகைசி கோப்பையை வென்றார்.
கிளாசிக்கல் ஆட்டங்களில் வென்றிருந்தால் அர்ஜுன் எரிகைசி அப்போதே 2,800 என்ற புள்ளிகளை கடந்திருப்பார். ஆனால், டிரா ஆனதால் இந்த சாதனையை அர்ஜுன் எரிகைசியினால் நிகழ்த்தமுடியாமல் போனது. 14 பேர் மட்டுமே 2,800 புள்ளிகளை பெற்றிருந்த நிலையில், அர்ஜுன் எரிகைசி 2796.1 என்ற புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் நீடித்தார்.
டபிள்யூஆர் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியின் வெற்றியின் மூலம் அர்ஜுன் எரிகைசிக்கு 20,000 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.18 லட்சம் 23 ஆயிரம்) பரிசுத் தொகையாகக் கிடைத்தது. மேலும், 27.84 ஃபிடே சர்கியூட் பாயிண்டுகள் கிடைத்தன. இது குறித்து அர்ஜுன் எரிகைசி, “நான் கிளாசிக்கல் ஆட்டதிலேயே வென்றிருக்க வேண்டும்” எனக் கூறினார்.
அர்ஜுன் எரிகைசி தற்போது ஐரோப்பிய செஸ் கிளப் கோப்பை 2024ல் விளையாடி வருகிறார். இதில் நேற்று (அக்.24) நடைபெற்ற ஆட்டத்தில் ரஷ்யாவின் டிமிட்ரி ஆண்ட்ரேகினை, அர்ஜுன் எரிகைசி தோற்கடித்தார். இதன் மூலம், அவர் வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அதாவது, அர்ஜுன் எரிகைசி ஃபிடே லைவ் ரேட்டிங்கில் 2,800 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளார். இவர் இந்த சாதனையை நிகழ்த்தும் 2ஆவது இந்தியர் ஆவார். இதற்கு முன்பு தமிழ்நாட்டின் விஸ்வநாதன் ஆனந்த் இந்த சாதனையை படைத்தார்.
இதன்மூலம் அர்ஜுன் எரிகைசி உலக செஸ் தரவரிசையில் 3ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளார். முதலிடத்தில் 2,831 புள்ளிகளுடன் மாக்னஸ் கார்ல்சனும், 2வது இடத்தில் 2,805.2 புள்ளிகளுடன் ஃபபியானோ கருணாவுன் உள்ளனர். அர்ஜுன் எரிகைசி படைத்த சாதனைக்காக விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.