நெருங்கும் புத்தாண்டு - முட்டை விலை கிடுகிடு உயர்வு...!
நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.85 ஆக உயர்ந்ததால், ஒரு முட்டை 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினமும் 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாமக்கல்லில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழ்நாட்டின் சத்துணவு திட்டத்திற்கும், கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
முட்டை விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வரும் நிலையில், இன்று மொத்த கொள்முதல் விலை ரூ.5.85 ஆகவும், ஒரு முட்டையின் விலை ரூ.6.50-லிருந்து 50 பைசாக்கள் உயர்ந்து ரூ.7-க்கு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஹோட்டல்களில் முட்டை பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளின் விலையும், புத்தாண்டு நெருங்கி வருவதால் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் கேக்குகளின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“முட்டையின் விலை சில நேரங்களில் ஏறும் இறங்கும். அதனால், நாங்கள் முட்டை பப்ஸ், பிரட் ஆம்லெட் போன்ற உணவுகளின் விலையை உயர்த்தவில்லை. மேலும், விலையை உயர்த்தினால் தினசரி வாடிக்கையாளர்கள் சிரமத்துக்கு உள்ளாவார்கள். எங்களுக்கும் வியாபார பாதிப்புகள் ஏற்படும்” என சில சாலையோர உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.