“அனைத்து தரப்பு வாதங்களையும் விரிவாக கேட்க வேண்டும்” – வக்ஃப் திருத்த சட்டம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து!
வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான இஸ்லாம் சமூக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே காங்கிரஸ், திமுக, தவெக, விசிக, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அச்சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன. இந்த மனுக்கள் மீதான விசாரணையில் உச்ச நீதிமன்றம் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது.
தொடர்ந்து வக்ஃப் திருத்த சட்டம் மத உரிமைகளை பாதிக்காது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், இந்தச் சட்டம் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறாது என்றும் அவ்வாறான வாதங்கள் தவறானவை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று(மே.05) தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் நடைபெற்றது. அப்போது நீதிபதி, “இந்த வழக்கில் எந்தவொரு தீர்ப்பை பிறப்பிக்க விரும்பவில்லை. ஏனெனில் இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் விரிவாக கேட்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்து, புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.