அவுட் குறித்து நடுவரிடம் வாக்குவாதம் - விராட் கோலிக்கு அபராதம்!
KKR - RCB போட்டியின் இடையே அவுட் குறித்து நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற 36ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் அதிரடியாக விளையாட முயற்சியில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்கள் எடுத்த நிலையில் ரிங்கு சிங் தனது விக்கெட்டை இழந்தார். ஆனலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். பின் 50 ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரமந்தீப் சிங் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அவருக்கு துணையாக ஆண்ட்ரே ரஸலும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோரும் 200 ரன்களைக் கடந்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரமந்தீப் சிங் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 22 ரன்களைச் சேர்த்தார்.
இதனைத் தொடர்ந்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலியும், டூப்ளெசியும் களமிறங்கினர். இவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். விராட் கோலிக்கு பந்துவீசிய ஹர்ஷித் ரானா பந்தை தலைக்கு பக்கத்தில் நோ பால் போன்று போட அதனைத் தடுத்த கோலி கேட்ச் ஆனார். ஆனால் நடுவர் நோபால் என அறிவிக்காமல் அவுட் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து விராட் கோலியும் நடுவரிடம் நேரே சென்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதனையடுத்து வில் ஜாக்ஸ் மற்றும் பட்டிதார் ஜோடி இணைந்து அணிகளின் ரன் எண்ணிக்கையை உயர்த்தி இருவரும் அரைசதம் அடித்து அவுட்டாகினர்.
இதனையடுத்து 1பந்திற்கு மூன்று ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலையில் அடித்து ஆடிய சிராஜ் 2ரன்கள் எடுத்து சமன் செய்ய முயற்சித்தபோது ரன் அவுட் ஆகி 1ரன் வித்தியாசத்தில் ஆர்.சி.பி அணி தோல்வியை தழுவியது. போட்டி முடிந்த பிறகு விராட் கோலி KKR வீரர்களுடம் பந்து வந்த விதம் குறித்தும் தான் எப்படி அதனை எதிர்கொண்டேன் என்பது குறித்தும் விளக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகின.
இந்த நிலையில் போட்டியின்போது அவுட் குறித்து நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி போட்டியின் கட்டணத் தொகையிலிருந்து 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.