நீங்கள் நலமா? திட்டம் - பயனாளிகளை வீடியோ காலில் தொடர்பு கொண்டு கருத்துகளை கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “நீங்கள் நலமா" என்ற திட்டத்தில் பயனாளிகளை நேரடியாக வீடியோ கால் வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த பின்னூட்டங்களைக் கேட்டறிந்தார்.
அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைவைதை குறித்தும், மக்களின் கோரிக்கைகள் குறித்து அரசுத் தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "நீங்கள் நலமா?" என்ற திட்டத்தை கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து மக்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தங்கள் புகார்களுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதா என அதிகாரிகள் கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்திலிருந்து, அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளை "நீங்கள் நலமா?" திட்டத்தின் மூலம் வீடியோ கால் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்பு கொண்டு, நலத்திட்டங்கள் குறித்த கருத்துகள் மற்றும் பின்னூட்டங்களைக் கேட்டறிந்தார்.
இந்த நிகழ்வின்போது முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், முதலமைச்சரின் முகவரித்துறை சிறப்பு அலுவலர் த.மோகன், ஆகியோர் உடனிருந்தனர்.